பெண்மையின் மென்மை

தாகம் உணர்ந்த உயிர்களுக்கு மட்டுமே தெரியும், பாலையில் கானல் நீரின் வலிமை. ஆனால் அந்த கானல் கூட கண  நேரமாவது  அந்த உயிர்களின் கண்களுக்கு மகிழ்ச்சியை தரும். என் கண்படும் தூரம் நீ தெரிந்தாலும், நான் நெருங்கும் வேளையில், கண நேரம் கூட நில்லாமல் நீ கானலாக கரைவதால் உன் மனதும் பாலைவனமோ என எண்ண தோன்றுகிறது.

சுடுகின்ற வார்த்தைகள், எவர் மனதை கூட எரிக்க கூடும். உன் வார்தைகள் கூட என்னை எரித்தன. ஆனால் அதை அணைக்கும் வலிமை என் கண்ணீரிடத்தில் மட்டுமே இருந்தன.

உலகிலுள்ள எந்த உயிர்களுக்கும் உணர்வுகள் என்பது உண்டு. என் உணர்வுகள் கூட இன்று உயிரற்று தான் கிடக்கின்றன, நீ உயிர் தருவாய், என்ற நம்பிக்கையில்.

நீல வானம் மழையை தூவினாலும் அதன் நிறம் என்றுமே சாயம் போவதில்லை. என் கனவுகளும் அந்த வானத்தை வென்றிடும் போலும். ஆம், அவைகள் கண்ணீரில் துடித்ததாலும் அதன் தாகம் மட்டும் இதுவரை தீர்ந்த பாடில்லை.

என்னை பொருத்த வரையில், நிஜத்தை விட சில நிழல்களுக்கு தான் வலிமை அதிகம். ஏனெனில் இங்கு நிஜத்தோடு நீயில்லை என்றாலும் நிழலாக நான் சேர்த்த உனது புகைப்படங்கள் மட்டுமே என்னோடு உரையாடுகின்றன. என் தனிமையின் நொடிகளும் கூட அதையே இரவலாக பெற விரும்புகின்றன.

உன்னோடு நான் பேச நினைத்த வார்த்தைகள் யாவும் ஒன்று கூடி , புது மொழியாகவே உருமாறின. அவைகளுக்கு கூட எவ்வளவு ஆசைகள் என்று தான் சிந்திக்க தோன்றுகிறது. ஆம் அவற்றை கூட செம்மொழியாக அறிவிக்க, வேண்டுமாம்.

சூரியனை சுற்றி வருவதால் மட்டுமே இந்த புவி உலகம் என்றானது என்பார்கள். உன்னை சுற்றியும் உறவுகள் பல இருப்பதால் மட்டுமே அவர்கள்  உன் உலகமாகி போனார்களோ என்னவோ! ஆனால் என்னை சுற்றி எங்கும் நீ தெரிவதால் மட்டுமே என் உலகமாக நீ எனக்கு தெரிகிறாய்.

Comments

Post a Comment

Popular Posts