இரண்டாம் உலகம்
சுழலும் கடிகாரமும் அதை சுழற்றிய நேரமும் சுற்றிப் பரந்த இவ்வுலகில்லை! பாடும் குயிலே! பேசும் கிளியே! உனைபோல் எவரும் அங்கே இசைப்பதுமில்லை! ஓடும் நதியே! அவை சேரும் கடலே! இவைபோல் சிறந்த உறவும் அங்கே கிடைப்பதுமில்லை! தனித்த இவ்வுலகே! தவித்த தனிமையே! இன்று துணையாய் நான் வந்தேன், நீ தனியாயில்லை! இரவின் இந்த இருளில், அமைதியின் ஒலியில் ஓர் இசைதான் இங்கே அரங்கேறியதே! அது பிறவா வரத்தில் இறவா வரையில் தாய் கருவில் சென்று இருந்திட அழைக்கிறதே! கண்களும் கண்ணீர் சிந்திட வலிகள் தான் காரணமோ! ஆனால் காரணம் கேட்டு அந்த வலிகளே நின்றால், அதை கண்கள் தான் கூறிடுமோ? நிழலில் நிலைத்த சில உணர்வுகள் தானோ! நிஜம் வரை செல்ல கசத்ததும் ஏனோ? முடிவற்ற பாதையில் கூட, சில பயணங்கள் வீணோ? அவை கடற்கரையில் கீறுக்கிய கவிதைகள் தானோ? ஓயாமல் ஒலித்தால் கூட, அலைகளின் இந்த ஓசை ஓய்ந்திடவில்லை! வீசிவரும் காற்று வீசாத போதும், மலரின் வாசம் மட்டும் அவை மறப்பதுமில்லை!